ஆரியர், யவனர், சகர், கூர்ஜரர், ஜாட், ஆபிரர், ஹுணர்கள், அராபியர்,
துருக்கியர் முதல் பின்னால் வந்த எத்தனையோ சிறு சிறு இனங்கள் கால மாற்றத்தில்
இந்தியாவிற்குள் வந்தனர்.
ஒவ்வொருவரும் உள்ளே வந்ததும் முடிந்தவரைக்கும் தங்களது காலணியை
உருவாக்கிய போதிலும் அடுத்து வந்தவர்களிடம் ஆட்சியைப் பறிகொடுத்து விட்டு நடையைக்
கட்டத்தொடங்கினர். ஆட்சி பறிபோனதும் தங்களை ஒரு இனமாகக் கருதிக் கொண்டு உள்ளே
வாழ்ந்து கொண்டிருந்த மக்களுடன் இரண்டறக் கலந்துவிட்டனர்.
இந்தியா என்பது எப்போதும் போலவே அகண்ட தேசமாகவே இருந்தது.
உள்நாட்டுப் போர்கள் முதல் வெளிநாட்டில் இருந்து வந்து யுத்தம் தொடுக்கும் அந்நிய
படையெடுப்பாளர்கள் வரைக்கும் ஒவ்வொன்றையும் சந்தித்துக் கொண்டேயிருந்தாலும்
அடிப்படை கிராம அமைப்பில் எந்த மாற்றமும் நடந்து விடவில்லை. இங்குப் பசி, பட்டினி,
பஞ்சம், புயல் என்று தொடர்ந்து வந்து கொண்டிருக்கும் இயற்கை சீற்றங்களுக்கும்
பஞ்சமில்லை.
மக்களும் பல சமயங்களில் பஞ்சை பராரி போலவே தங்களது வாழ்க்கையை
நடத்திக் கொண்டு “இதுவும் கடந்து போகும்” என்பதாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இயற்கை மற்றும் செயற்கை காரணங்களினால் எத்தனை பிரச்சனைகள் இந்தியாவைத் தாக்கிக்
கொண்டிருந்தாலும் 19 ஆம் நூற்றாண்டு வரைக்கும் இந்தியாவின் உள்கட்டமைப்புக்
கலாச்சாரத்தைப் பெரிய அளவுக்குச் உருவான எந்த மாற்றங்களும் சிதைத்து விடவில்லை
என்பதும் உண்மையே.
ஆயிரக்கணக்கான வருடங்களுக்கு முன்னால் இருந்து சுற்றிக் கொண்டே
கைராட்டினமும், கைத்தறியும் தொடந்து ஓடிக் கொண்டேதான் இருந்தது. இயக்குவதற்குத்
தேவைப்படும் மனித சக்திகளுக்கும் பஞ்சமில்லை.
பழைய காலத்தில் ஃபினிஷியன், கிரேக்க, ரோமனிய, அரேபிய வியாபாரிகளின்
மூலம் இந்தியத் துணிகளையும், மற்ற உபயோகப் பொருட்களையும் ஐரோப்பா வாங்கிக் கொண்டு
விலையுயர்ந்த ரத்தினங்களையும், பல்வேறு விதமான கனிமப் பொருட்களையும் இங்கே கொண்டு
வந்து கொடுத்துக் கொண்டிருந்தனர். எல்லாமே பண்டமாற்று முறையில் நடந்த
கொண்டிருந்தது.
தங்கத்தின் மீதிருக்கும் ஆசை இன்று நேற்றல்ல ஆதிகாலம் தொட்டே
இருந்தது. மன்னர்கள் முதல் வேத புரோகிதர்கள் வரை ஒவ்வொருவருக்கும் இருந்த இந்த
ஆசைகளே பலரையும் இங்கே வரவழைத்தது. இந்தியாவிற்குள் வந்திறங்கும் ஒவ்வொரு
வணிகர்களின் நோக்கமும் பண்டமாற்று முறை மூலம் நல்லபடியாகத்தான் போய்க்
கொண்டிருந்தது. ஆனால் நம்ம பிரிட்டன் மக்கள் கெட்டிக்காரர்கள் தானே? வைத்தார்கள்
ஒரு பெரிய ஆப்பு.
ஒவ்வொரு இடமாகக் கைவைத்து கலகலக்க வைப்பதை விட மொத்தமாக ஒரே
இடத்தில் கைவைத்தால் போதும் என்ற முடிவுக்கு வந்தனர். அதைத்தான் செயல்படுத்த
தொடங்கினர். இதைப்பற்றியும் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளச் சில ஆதார சரித்திர
குறிப்புகள் இருக்கிறது.
1853 ஜுன் மாதன் 25ல் நியூயார்க் ட்ரிப்யூன் பத்திரிக்கையில் ஒரு
கட்டுரை வெளியானது. ஏறக்குறைய இந்தியாவின் சுதந்திர போராட்டத்திற்கு வித்திட்ட
சிப்பாய்கள் கலகம் நடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னாலே வெளிவந்தது. கட்டுரையின்
தலைப்பு ” இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி ” என்ற பெயரில் வெளிவந்தது. அதில் வந்துள்ள
கட்டுரை பல உண்மைகளை வெளிச்சம் போட்டுக் காட்டியது.
கட்டுரையில் என்ன இருந்தது என்பதைக் கடைசியில் பார்க்கலாம்.
முதலில் நமது இந்தியாவில் இருந்த சமூக அமைப்பு எப்படியிருந்தது என்பதைப் பார்த்து
விடலாம்.
ஒரு கிராமம் என்பது பூகோள ரீதியில் நூறு ஏக்கர் முதல்
ஆயிரத்திற்கும் மேற்றபட்ட ஏக்கர்களைக் கொண்டதாக இருந்தது. இதில் விவசாய நிலங்களும்,
தரிசு நிலங்களும் இருந்தது. ஏறக்குறைய இது போன்ற சிறுசிறு கிராமங்களை உள்ளடக்கிய
பகுதிகளைக் கொண்டதாக ஒரு சிறுநகரம் உருவாகியிருந்தது. ஒரு கிராமத்தின் நிர்வாக
அமைப்பினை கிராம முன்சீப் கவனித்தார். இவரே கிராமத்தின் அத்தனை பிரச்சனைகளையும்
கவனித்தார்.
மேலும் கிராமத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பத்தையும் தனிப்பட்ட
முறையில் பழகி வைத்திருப்பதன் காரணமாக இவருக்கு நிர்வாகம் செய்வதில் எந்தப்
பிரச்சனையும் உருவானதில்லை. உடனடி தீர்வுகள் மூலம் ஒவ்வொரு கிராமத்தின் அமைதியும்
நிலைநாட்டப்பட்டது. முறைப்படியான வரிவசூல் முதல் தனிப்பட்ட விரோதங்களை நீக்குவது
முதல் இந்தக் கிராம முன்சீப் சிறப்பாகவே செயல்பட்டனர்.
கிராமத்தில் உள்ள கணக்குபிள்ளைகளைக் கர்ணம் என்று அழைக்கப்பட்டனர்.
இவரே அந்தக் கிராமத்தில் இருக்கும் மொத்த வயல்களின் நீளம் அகலம் போன்ற கணக்கு
வழக்குகளைக் கையாண்டு கொண்டிருப்பவர். இது தவிரக் கிராமத்திற்கென்று இருக்கும்
வெட்டியான்கள் தனிப்பட்ட முறையில் உள்ளே நடக்கும் சங்கதிகளை உளவு பார்த்து கிராம
முன்சீப்பிடம் கொண்டு வந்து சேர்த்துக் கொண்டிருந்தனர். இது தவிரத் தோட்டி என்பவன்
தனியாக உண்டு.
இவன் இரண்டு கிராமங்களுக்கும் இடையே உள்ளே எல்லைகள் முதல்
வயல்களுக்குப் பாதுகாப்பு வரைக்கும் போன்ற மற்ற விசயங்களுக்கு ஆதாரமாக இருந்து தனது
பணியைச் சிறப்பாகச் செயல்படுத்திக் கொண்டிருந்தான்.
இரண்டு கிராமங்களுக்கிடையே எல்லைப் பிரச்சனை மற்றும் நீர்
சம்மந்தமான பிரச்சனைகள் உருவானால் இவனே சாட்சியாகச் செயல்பட்டுக் கொண்டிருந்தான்.
ஏரிகளை, நீர்நிலைகளைக் காவல் காப்பதும் இவனின் கடமையாகும். ஒவ்வொருவரின்
வயல்களுக்கும் நீரை பங்கீட்டு அளிப்பது முதல் கண்மாய்ப் பாதுகாப்பது வரைக்கும்
இவனின் பொறுப்பாகும்.
பிராமணன் மொத்த கிராமத்து மக்களுக்குப் பூஜை செய்பவன். கிராம
ஆசிரியர்கள் பிள்ளைகளுக்கு மணலில் எழுத்துக்களை எழுதி கற்றுக் கொடுப்பவர்.
ஊருக்குள் இருக்கும் ஜோதிடர் கிராமத்து மக்களுக்குச் சகுனங்களைத் தெரிவிப்பவர்.
மொத்ததில் ஒவ்வொரு கிராமத்திலும் வாழ்ந்து கொண்டிருந்த மக்களுக்கு
வெளியே என்ன நடக்கின்றது என்பது குறித்துக் கவலைப்பட்டுக் கொள்வதில்லை. அந்நிய
படையெடுப்பா, மன்னரா, குறுநில மன்னரா என்பது போன்ற தேவையில்லாத விசயங்களில் கவனம்
செலுத்துவதும் இல்லை அது குறித்து அலட்டிக் கொள்வதும் இல்லை.
“ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எங்களுக்குக் கவலையில்லை”என்பது
போலவே அவரவர் வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தனர்.
இடையில் வரும் பஞ்சம், வறுமை, கொடிய நோய்கள் என்று ஒவ்வொன்றாகக்
கிராமத்தை தாக்கிவிட்டு ஏராளமாக மனித உயிர்களைக் காவு வாங்கிய போதில் அடிப்படை
கிராம மக்களின் சிந்தனைகளில் எந்த மாற்றமும் உருவாகவில்லை. கட்டுக்கோப்பு
என்பதாகத்தான் வாழ்ந்து கொண்டிருந்தனர்.
மேல்மட்ட அளவில் உள்ளவர்கள் அடித்துக் கொண்டு செத்தனரே தவிர அது
போன்ற எந்த விசயங்கள் கிராமத்திற்குள் வருவதுமில்லை. கிராமத்தின் உள்ளே வாழ்ந்து
கொண்டிருந்தவர்களுக்கு எந்தத் தாக்கத்தையும் உருவாக்கவுமில்லை. ஆங்கிலேயர்கள் உள்ளே
வந்து ஒவ்வொரு பகுதியை சுற்றிப் பார்த்த போது தான் இந்த அருமை பெருமைகளைத்
தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்த தொடங்கினர். இப்போது மேலே சொன்ன கட்டுரையில்
சொல்லப்பட்டிருந்த முக்கியச் சராம்சத்தைப் பார்த்துவிடலாம்.
“இந்தச் சிறய அசைவற்ற சமுதாய அமைப்பு இப்பொழுது பெரும் பகுதி
அழிந்து விட்டது. அல்லது அழிந்து கொண்டிருக்கிறது. ஆனால் இதற்குக் காரணம்
பிரிட்டனின் வரி வசூலைக் காட்டிலும், பிரிட்டிஷ் சிப்பாய்களை விடவும்
பிரிட்டிஷாரின் நீராவி இஞ்சினும், சுதந்திர வணிகக் கொள்கையுமேயாகும்” என்று
நியூயார்க் ட்ரிப்யூன் பத்திரிக்கையில் கட்டுரையாக வந்தது.
இது போன்ற ஒரு அமைப்பில் வாழ்ந்து கொண்டிருந்த கிராமத்து மக்களை
ஒரே நாளில் அடிமையாக்கி விட முடியுமா? கிராமத்து அடித்தள விசயங்களில் கைவைக்காமல்
சுற்றிலும் உள்ள விசயங்களில் கவனம் செலுத்தினர். மெதுமெதுவாக இந்தச் சமூக அமைப்பை
குளறுபடியாக்கி தெளிந்த குளத்தைச் சேறாக மாற்றத் தொடங்கினர்.
No comments:
Post a Comment