இதற்கு மேலும் விலைவாசி உயர்வு மற்றும் ஏழை பணக்காரனுக்கும் இடையே
உள்ள மிகப் பெரிய இடைவெளியின் காரணமாகச் சராசரி மனிதர்களால் உணவுப் பொருட்களை
வாங்கி உண்ண முடியுமா என்ற அவலம் விரைவில் உருவாகப் போகின்றது என்கிறார்கள்.
ஏன்?
கடந்த 8வது ஐந்தாண்டு திட்டத்தில் வேளாண் வளர்ச்சி விகிதம் 4.7
சதவிகிதமாக இருந்தது. இதுவே 9வது ஐந்தாண்டு திட்டத்தில் 2.1 சதவிகிதமாகக் குறைந்து
இப்போது 10வது ஐந்தாண்டு திட்டத்தில் 1.8 சதவிகிதமாகக் கழுதை தேய்ந்து கட்டெறும்பாக
மாறியுள்ளது.
இப்போது அந்நிய மூதலீட்டை எவர் எதிர்த்தாலும் உள்ளே கொண்டு வந்தே
தீருவேன் என்று சூளுரைத்துள்ள மன்மோகன் சிங் இந்தச் சமயத்தில் வேறொன்றையும்
சுட்டிக்காட்டியுள்ளார். அந்நிய நிறுவனங்கள் உள்ளே வரும் போது நமது விவசாயப்
பொருட்களுக்கு உரிய விலை கிடைக்கும் என்பதோடு, அவர்கள் உருவாக்கும் நவீன தொழில்
நுட்ப குளிர்பதன கிடங்கால் எந்தப் பொருளும் வீணாகாது. உணவுப் பொருட்களுக்குத்
தட்டுப்பாடும் வராது என்கிறார்.
ஆனால் 60 வருட மக்களாட்சியில் இந்தியாவில் ஆண்ட தலைவர்களால்
உள்ளூர் தானியங்களைப் பாதுகாக்க ஏற்பாடு செய்ய முடியவில்லை. அந்நிய நிறுவனங்கள்
தான் வரவேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்களே? இதை விட நமக்கு என்ன பெருமை
வேண்டும்.
வீணாகும் உணவுதானியப் பொருட்களைப்பற்றி இதே மன்மோகன் சிங் சொன்ன
வார்த்தைகளுக்கு ஏற்கனவே உச்சநீதி மன்றம் குட்டு வைத்ததை நாம் அணைவரும் அறிந்த
போதிலும் இந்த அறிவிலிகள் சொல்வதை எதிர்க்க முடியாத எதிர்க்கட்சிகள் அவரவர் அரசியல்
நிலைப்பாட்டை வைத்துக் கொண்டு கும்மி தட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
நாமும் நமது நிலத்திற்கு உண்டான மரியாதையையும் கொடுக்க வில்லை.
அந்த நிலமும் நாம் விரும்பும் மகசூலையும் தருவதில்லை. உருப்படியான ஒட்டு ரக விதைகளை
நாம் உருவாக்காத காரணத்தால் ஒரு ஹெக்டேருக்கு 4700 கிலோ மகசூல் கோதுமை கொடுத்துக்
கொண்டிருந்த விளைநிலங்கள் இன்றைய காலகட்டத்தில் 4000 கிலோ கொடுத்துக்
கொண்டிருக்கிறது. இதைப் போலவே அரிசி முதல் அத்தனை பயிர்களும் நமக்குப் பயம்
காட்டிக் கொண்டிருக்கிறது.
சமையல் எண்ணெய் மட்டும் கடந்த ஆண்டில் 30 000 கோடி ரூபாய்க்கு
வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்து இருக்கிறோம். பாமாயில் என்றால் ஒரு காலத்தில்
மூக்கை பொத்திக் கொண்டு கடலை எண்ணெய் பக்கம் ஓடினோம். ஆனால் இன்று கடுகு எண்ணெய்
வரைக்கும் வந்துவிட்டது. சுத்திகரிக்கப்பட்டது என்ற இந்த ஒரு வார்த்தை தான் இன்று
நுகர்வு கலாச்சாரத்தையே தலைகீழாக மாற்றியுள்ளது.
தண்ணீர் முதல் எண்ணெய் வரைக்கும் சுத்திகரித்து உண்டபோதிலும்
புதுப்புது நோய்கள் நம்மைச் சுத்திக்கொண்டேதான் இருக்கு.
உணவு பழக்க மாறுபாட்டினால் இன்று இந்தியாவில் தான் அதிக அளவு
சர்க்கரை வியாதி நோயாளிகள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய சூழ்நிலையில் ஒவ்வொரு விவசாயிகளும் வேறு வாய்ப்பு
கிடைத்தால் நிலத்தை அப்படியே போட்டு விட்டு ஓடத் தயாராக இருக்கிறார்கள். காரணம்
இடைத்தரகர்கள் உண்டு கொழுக்க எத்தனை நாட்களுக்குத் தான் “உழுதவன் கணக்கு பார்த்தால்
உழக்கு கூட மிஞ்சாது” என்ற பழமொழியைச் சொல்லிக் கொண்டே இருக்க முடியும். வளர்ந்து
கொண்டிருக்கும் இளைய சமூதாயமும் விவசாயமென்பது வேலையத்த வெட்டிப் பய பொழப்பு என்கிற
ரீதியில் தகவல் தொழில் நுட்ப துறையில் கண்ணும் கருத்துமாக இருப்பதால் கண் விற்றுச்
சித்திரம் வாங்க ஆவலாய் பறந்து கொண்டிருக்கின்றோம்.
இன்று இந்தியாவில் ஏறக்குறைய 47 சதவிகித நடுத்தர விவசாயிகளும், 70
சதவிகித குறு விவசாயிகளும் இருக்கிறார்கள். எந்த விவசாயிகளாவது வங்கியில் சென்றால்
உடனடியாகக் கடன் கிடைத்து விடுமா? ஆனால் சாராயச் சாம்ராஜ்ய சக்ரவர்த்தி விஜய்
மல்லையாவுக்குப் பிரச்சனை என்றவுடன் அரசாங்கமே அலறுகின்றது.
இதைவிட மற்றொரு கொடுமையும் உண்டு.
இந்தியாவில் உள்ள ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள மண்வளத்திற்கும்
அரசாங்க அறிக்கைகளுக்கும் பெரிய முரண்பாடுகள் உள்ளதால் எந்த மாநில விவசாயிகளுக்கு
எந்த அளவுக்குக் கடன் கொடுக்க வேண்டும் என்ற திட்ட அறிக்கையிலேயே ஆயிரம்
குளறுபடிகள்.
பஞ்சாப்பில் இருக்கும் விவசாயிகளுக்கு வெண்ணெய். தமிழ்நாட்டில்
இருக்கும் விவசாயிகளுக்குச் சுண்ணாம்பு என்கிற ரீதியில் தான் இந்திய விவசாய
அமைச்சகத்தின் செயல்பாடுகளும் இருக்கிறது. ஆனால் மத்திய அரசாங்கம் கொண்டு வந்த
அற்புதமான திட்டமான “தேசிய ஊரக வேலை வாய்ப்பு ” திட்டத்தின் மூலம் கொஞ்சம்
ஆர்வமிருந்த விவசாய மக்களையும் அக்மார்க் சோம்பேறியாக மாற்றிவிட்டது.
வேலை எதுவும் செய்யாமலே தினந்தோறும் கூலி என்கிற நிலைக்கு இந்த
“தேசிய வேலை வாய்ப்புத் திட்டம்” மக்களை மாற்றியுள்ளது. உலக வங்கி கடன் சுமை
இந்தியாவிற்கு அழுத்த உள் நாட்டில் சோம்பேறிகளும் அதிகமாகி விட்டார்கள்.
நமக்குத் தேவைப்படும் பொருட்களை வெளிநாட்டிலிருந்து இறக்குமதி
செய்ய நம்மை ஆளக்கூடிய கணவான்கள் காத்திருக்கிறார்களே? உள்ளூரில் விளையும்
கோதுமைக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்த மத்திய அரசாங்கம் தரம் குறைந்த ஆஸ்திரேலியா
கோதுமைக்கு ரூபாய் 1600 கொடுத்து இறக்குமதி செய்த கொடுமையெல்லாம் உங்களுக்குத்
தெரியுமா?
அரசாங்கத்தின் இறக்குமதி கொள்கை என்பது மக்களுக்காக அல்ல. இடையில்
இருப்பவர்கள் உண்டு கொழுக்க மட்டுமே.
இவை விட நமக்கு வேறென்ன வேண்டும்?
ஐக்கிய நாட்டு மக்கள் தொகை நிதி அமைப்பு அறிக்கையின்படி 2050 ஆம்
ஆண்டு உலகில் சீனாவும், இந்தியாவும் மிகப் பெரிய ஜனத்தொகை கொண்ட நாடாக விளங்கும்
என்கிறார்கள்.. சீனாவின் மக்கள் தொகை 141 கோடியாகவும், இந்திய ஜனத்தொகை 161
கோடியாகவும் இருக்கும் என்று கணக்கிட்டு இருக்கிறார்கள்.
இதில் கூட நாம் தான் முதல் இடத்தில் இருக்கிறோம்.
ஆனால் நமக்கான உணவு பற்றாக்குறையை எப்படிச் சமாளிக்கப் போகின்றோம்?
சீனாவும், இந்தியாவும் உணவுக்காக உலக நாடுகளில் கையேந்த தொடங்கினால் இப்பொழுதே
பசியினால் இறந்து கொண்டிருக்கும் ஆப்பிரிக்கா நாடுகளின் எதிர்கால நிலைமை என்னவாகும்
என்பதை யோசித்துப் பார்த்து இருக்கிறோமா?
கடந்த 50 ஆண்டுகளில் வேளாண் இடு பொருட்களின் விலை 100 மடங்கு
அதிகமாகி உள்ளது. ஆனால் உற்பத்தி செய்யும் வேளாண்மை பொருட்களின் விலை பத்து மடங்கு
தான் அதிகமாகியுள்ளது.
எவருக்குக் காலம் முழுக்க விவசாயியாக இருக்க மனம் வரும்.?
ஒரு ரியல் எஸ்டேட் தொழில் செய்பவன் ஐந்து வருடங்களில் மகா
கோடீஸ்வராக மாற ஐம்பது ஏக்கர் வைத்திருக்கும் ஒரு விவசாயி காலம் முழுக்கக்
கஷ்டப்பட்டுக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலையில் தான் வாழ்ந்து
கொண்டிருக்கின்றான்.
வல்லரசு என்ற வார்த்தையை நாம் தவறாகப் புரிந்து
கொண்டிருக்கின்றோம். நம்முடைய சுய தேவைகளைப் பூர்த்திச் செய்ய வக்கில்லாமல் ஆயுத
பெருக்கத்தில், அணு ஆயுத வளர்ச்சியில், அந்நிய மூதலீட்டிலும் கவனம் செலுத்தும்
ஆட்சியாளர்கள் நமக்கு விட்டுச் செல்லப் போவது என்ன தெரியுமா? ஒரு நூற்றாண்டுக்கு
முன்னால் நம் முன்னோர்கள் அனுபவித்த பசி, பட்டினி, பஞ்சத்தைத் தான் சந்திக்கப்
போகின்றோம்.
ஆனால் அந்நிய நிறுவனங்களுக்காக உழைத்துக் கொண்டிருப்பவர்களின
சந்ததிகள் ஏதோவொரு நாட்டில் சேர்த்து வைத்த சொத்துக்களைச் சொத்தைப்பல்லாகி விழும்
வரைக்கும் அனுபவித்துச் சகல சந்தோஷங்களுடன் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.
“உலகமயம் என்பது ஏழை மூன்றாவது நாடுகள் மீது தொடுக்கப்பட்ட
யுத்தம். ஆயுதங்களை வைத்து தான் ஒரு நாட்டை அடிமையாக்க வேண்டும்
என்பதில்லை. கத்தியின்றி ரத்தமின்றி ஆடை மாற்றம், உணவு மாற்றம் என்று
கலாச்சாரத்தைச் சிதைதாலே போதும். ஒரு நாடு நாசமாகப் போய்விடும்.
உங்களுக்கு எதிரி யாரென்றே தெரியாது. யாரை எதிர்த்துப்
போராடுவீரக்ள். அமெரிக்காவுடன் அணுசக்தி ஒப்பந்தம் மட்டும் போட்டு விட்டால்
அதோட முடிந்து போகும் உங்க ஆட்டம்.”
இப்படி நமக்குச் சாபம் கொடுத்திருப்பது யார் தெரியுமா?
ரம்சே கிளார்க் என்னும் அமெரிக்க வக்கீல். மோனிகா லெவன்ஸ்கிட்ட
தன்னோட திறமையைக்காட்டிய முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளிண்ட்னை நீதி மன்றத்தில்
வைத்து புரட்டி எடுத்த மனித உரிமை வக்கில்.
இப்போது ஒரு கேள்வி வர வேண்டுமே?
அரசாங்கம் கொடுக்கும் இலவசம் மற்றும் மானியத்தை நிறுத்தினாலே நம்
நாடு விரைவில் முன்னேறிவிடும் என்று சொல்பவர்களா நீங்கள்?
நன்றி
No comments:
Post a Comment