Wednesday, May 24, 2017

அண்டார்ட்டிக்காவைப் பற்றி

பரந்த வானம், வானத்தின் வெட்டவெளி, ஆழ்ந்த கடல், மலையுச்சிகள், குறிப்பாக பனிபடர்ந்த மலைகள், மற்றும் பனிப் பொழிவு இந்த நான்கும் தள்ளி நின்று  பார்ப்பதற்கு அழகாகவும், பிரமிப்பாகவும் இருந்தாலும், அருகே போனால் ஒரு வித பயத்தையே எனக்குக் கொடுத்திருக்கின்றன. இன்றும் எனக்கு மர்மமாகவே இருக்கின்றன.  இவற்றைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு எனக்கு எப்பொழுதும் ஆர்வம் இருந்திருக்கிறது. இவற்றைப் பற்றிப் படிக்கும் பொழுதும், கேள்விப்படும் பொழுதும், பார்க்கும் பொழுதும், பேசும் பொழுதும் எனக்குப் புல்லரித்திருக்கிறது. 

சில நாட்களுக்கு முன்பு இந்து ஆங்கில செய்தித்தாளில் வந்த ஒரு செய்தி என்னை திகைக்க வைத்தது.

55-வயதே ஆன ஹென்றி வொர்ஸ்லி என்ற இங்கிலாந்தைச் சேர்ந்த ஆய்வுப்பயணி….
            71 நாட்களாக…. 
தனக்கு இன்றியமையாத உணவு, உடை பொருட்களை ஏற்றிய ஒரு சறுக்கு  வண்டியையும் இழுத்துக்கொண்டு…. 
தென் துருவத்திலிருக்கும் அண்டார்டிக் கடலில் பனிப்பாறைகளின் மேல்….. 
ஒரு தனி மனிதனாக….. 
1000 மைல்கள் (1600 கி.மீ) நடக்க வேண்டும் என்ற இலக்கை அடைய 30 மைல்களே இருந்த நிலையில்…. 
உடலில் தண்ணீர் வற்றிப்போய் ஆயாசப்பட்டு உதவிக்கு செய்தி அனுப்ப….
வான் வழியே அவரைக் காப்பாற்ற முயற்சித்திருக்கிறார்கள். 
இருந்தும் அவர் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை. 
இந்த ஆய்வுப் பயணத்தை ஹென்றி வொர்ஸ்லி மேற்கொண்டதன் மூலம் காயப்பட்ட படைவீரர்களின் நலனுக்காக ஒரு லட்சம் பவுண்ட்  (சுமார்  ஒரு கோடி இந்திய ரூபாய்) நிதி திரட்டியிருக்கிறார்.

சற்று யோசித்துப் பார்த்தேன்…. பனிப்பாறைகளின் மீது நாளொன்றுக்கு 14 மைல் 71 நாட்கள் தொடர்ந்து 970 மைல் தூரம் நடந்திருக்கிறார். எவ்வளவு பெரிய சாதனை. ஒரு நல்ல குறிக்கோளுக்காக தன் உயிரையே பணயம் வைத்து நடந்திருக்கிறார்.

அண்டார்ட்டிக்கா கடல் என்ன சாதாரணமானதா? 

உடனே வலையில் அண்டார்ட்டிக்கா பற்றிய தகவல்களை படிக்கத் தொடங்கினேன். அண்டார்ட்டிக்காவுக்கு செல்வதற்கு எத்தனையோ பேர் துணிந்து, நவீன வசதிகள் இல்லாத போதும் கூட முயன்றிருக்கிறார்கள் என்பதை படிக்கும்பொழுது மிக ஆச்சரியமாகவும், திகிலாகவும் இருந்தது. ஒரு சில உண்மைக் கதைகளைப் பற்றி எழுத வேண்டும் என்று தோன்றியது.

முதலில் அண்டார்ட்டிக்காவைப் பற்றிய சில பொதுவான விவரங்களைத் தெரிந்து கொள்ளலாம். 

அண்டார்ட்டிக்கா என்ற பகுதியைப் பற்றிய யூகங்கள் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலேயே மனிதனுக்கு இருந்திருக்க வேண்டும். என்று தோன்றுகிறது. ‘டெர்ரா ஆஸ்திரேலிஸ்’ (தெற்கு நிலப்பரப்பு) என்ற ஒரு நிலப்பரப்பு பூமியின் தென் கோடியில் இருப்பதாக மேலை நாட்டினர் வெகு காலமாக நம்பி வந்திருக்கின்றனர்.  

முதன் முதலாக 1773-ல் ஜேம்ஸ் குக் என்ற மாலுமி அண்டார்ட்டிக்காவை சுற்றி வந்திருந்தாலும் ஒரு சில தீவுகளை மட்டுமே தொட்டிருக்கிறார். அண்டார்ட்டிக்காவுக்கு செல்ல முடியவில்லை. 

1820-களில் பல ஆய்வுப் பயணிகள் அண்டார்ட்டிக்காவை நோக்கி படையெடுத்து பனிப்பாறைகள் நிறைந்த இந்த கண்டத்தைப் பற்றி ஓரளவு தெரிந்து வைத்திருக்கின்றனர். அண்டார்ட்டிக்காவை முதன் முதலில் கண்டுகொண்டவர் ரஷ்யர்கள். 

பின்பு 1821-ல் அமெரிக்க மாலுமியான ஜான் டேவிஸ் என்பவர்தான் அண்டார்ட்டிக்காவின் பனிப்பாறைகளின் மீது முதன் முதலாக காலெடுத்து வைத்திருக்கிறார். 

இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலங்களில் பல ஆய்வுப் பயணங்கள் தென் கோடியை   நோக்கி சென்றிருக்கின்றன. பெரும்பாலானவர்கள் தங்கள் முயற்சியில் தோல்வியடைந்து காயப்பட்டு திரும்பி விட்டனர், அல்லது உயிரை விட்டிருக்கின்றனர். இறுதியில் ஆங்கிலேய மாலுமியான ராபெர்ட் ஸ்காட் என்பவரின் தீரமான முயற்சி தோல்வியடைந்ததையொட்டி, டிசம்பர் 14, 1911 அன்று நார்வேக்காரரான ரோல்ட் அமுன்ட்சென் வெற்றிகரமாக தென் துருவத்தில் அண்டார்ட்டிக்காவில் காலெடுத்து வைத்திருக்கிறார்.

அண்டார்ட்டிக்காவைப் பற்றிய சில சுவையான தகவல்கள்
அண்டார்ட்டிக்கா பூமியின் தென் கோடியில் தென் துருவத்தை அடக்கியுள்ள ஒரு கண்டம். தென் கடல்கள் இதனை சூழ்ந்திருக்கின்றன. ஆசியாவுக்கு அடுத்த படியாக 5.4 மில்லியன் சதுர மைல்கள் பரப்பளவு கொண்ட ஐந்தாவது பெரிய, முழுவதுமாக பனி சூழ்ந்த கண்டம். பூமியின் மிகக் குளிர்ந்த, உலர்ந்த, அதிகமாக காற்று வீசும் பகுதியும் அண்டார்ட்டிக்காதான்.    

இரண்டு பகுதிகளாகக் கொண்ட அண்டார்ட்டிக்காவில் கிழக்குப் பகுதியின் – சுமார் ஆஸ்திரேலியாவின் அளவு கொண்டது - பனிப்பாறைகளின் உயரம் சராசரியாக 1.2 மைல்கள். மேற்கு அண்டார்ட்டிக்கா பெரும்பாலும் தென் அமெரிக்காவின் தென் முனைவரை தொடரக்கூடிய, உறைந்து போன பல தீவுகளைக் கொண்டது. இந்த இரண்டு பகுதிகளையும் அண்டார்ட்டிக்கா முழுவதும் பரந்திருக்கும் பெரிய மலைத் தொடர் ஒன்று பிரிக்கிறது.

அண்டார்ட்டிக்காவில் காணப்படும் பனிக்கட்டியின் பரப்பளவு பனியால் உறைந்த ஆறுகளின் (Glaciers) ஓட்டத்தின் காரணமாக உடைக்கப்பட்டும், பிளக்கப்பட்டும் மாறிக்கொண்டே இருக்கின்றது. அது மட்டுமல்லாமல் மேற்பகுதியில் காணப்படும் அதிக கனமில்லாத பனிக்கட்டி போர்வைகளுக்குக் கீழே நூற்றுக்கணக்கான அடிகள் ஆழம் கொண்ட பனிக்கட்டி பிளப்புகளும் (Crevasse) காணப்பட்டுகின்றன.

பெரும்பாலும் ஈரப்பசை இங்கே காணப்படாததால் பொதுவாக அண்டார்ட்டிக்காவை ஒரு பாலைவனமாகவே கருதுகின்றனர். இருந்தும் பல நேரங்களில் பனித்துகள்களை சுமந்துகொண்டு 200 மைல் வேகம் வரை கூட வீசும், பலத்த குளிர் காற்றுக்கு (blizzard) அண்டார்ட்டிக்கா பிரபலமானது.

அண்டார்ட்டிக்காவில் கொதிக்கும் வெந்நீரை மேலே விட்டெறிந்தால் அது உடனேயே நீராவியாகவும் சிறு பனிக்கட்டிகளாகவும் மாறிவிடும் என்பது ஒரு ஆச்சரியமான விஷயம்.

அண்டார்ட்டிக்காவின் பனிக்கட்டிகள் உருகினால் பூமியின் மற்ற பகுதிகளிலுள்ள கடல் நீர் மட்டம் 200 அடி வரைகூட உயருவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

2000-ஆம் ஆண்டு ராஸ் பனித்தட்டுகளிலிருந்து (Ross Ice Shelves) கடல் மட்டத்துக்கு மேல் 4250 சதுர மைல்கள் மேற்பரப்பளவு கொண்ட (அமெரிக்காவின் டெக்சாஸ் மானிலத்தின் அளவு) ஒரு பனிப்பாறை பிளந்து விழுந்ததுதான் இதுவரை நேர்ந்த பனிப்பிளவுகளிலேயே மிகப் பெரியது.  பிளந்து விழுந்த பகுதியைப் போல பத்து மடங்கு பெரிய பாறைகள்  நீர் மட்டத்துக்குக் கீழே இருந்தன என்பதுதான் இன்னொரு ஆச்சரியம்.
      அக்டோபர் முதல் பிப்ரவரி வரை கோடை காலமாகவும் ஆண்டின் மற்ற மாதங்கள் குளிர் காலமாகவும் இங்கு காணப்படுகின்றன. பூமியின் வடக்குப் பகுதிகளுக்கு நேரெதிரான பருவ நிலை. மரம், செடி, கொடிகள் இங்கு வளர்வதில்லை. பெங்குவின், வேல், சீல் போன்ற கடல் இனங்களை கடலோரப் பகுதிகளில் காணலாம்.

நிரந்தரமாக இங்கு வசிப்பவர்கள் யாருமில்லை என்றாலும் பல ஆராய்ச்சிகளுக்காக ஆயிரத்திலிருந்து ஐயாயிரம் வரை மக்கள் இங்கே எந்நேரத்திலும் தங்கியிருப்பதைக் காணலாம்.  

அண்டார்ட்டிக்கா பகுதியில் ராணுவ நடவடிக்கைகள், கனிம வளங்களெடுத்தல், அணு பரிசோதனை செய்தல் போன்ற சுற்றுப்புற சூழ்னிலையை பாதிக்கக் கூடிய எந்த செயல்களிலும் ஈடுபடமாட்டோம் என்ற அண்டார்ட்டிக்கா ஒப்பந்தத்தில் (1959)  சுமார் 50 நாடுகளுக்கு மேல் கையெழுத்திட்டிருக்கின்றனர். 
    இனி அண்டார்ட்டிக்காவை வெல்வதற்கு படையெடுத்த ஒரு சிலரது கதைகளைப் பார்ப்போம்.

No comments:

Post a Comment