Thursday, May 25, 2017

அதிசய மனித நாஸ்ட்ரடாமஸ்

நாஸ்ட்ரடாமஸ் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கலாம். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்தவர் இவர். பாரம்பரியமாகவே இவர்களது குடும்பம் வருங்காலம் உரைத்தலில் திறமை பெற்றிருந்தது. அதன் வழி இவருக்கும் அந்த ஆற்றல் வந்தது. பாரம்பரிய சோதிடத்தை தனது முன்னோர்களிடம் பயின்ற இவர், “கப்பாலா” முறை எனப்படும் ரகசிய ஆருட முறையையும் பயின்றார்.
ஆனாலும் அவற்றை விடுத்து மருத்துவத்தை முறையாகப் பயின்று டாக்டர் ஆனார்.
தனது தியான ஆற்றலாலும், சில இரகசிய முறைப் பயிற்சிகளாலும், மருத்துவத் திறமையாலும் தீராத நோய்களை எல்லாம் தீர்த்து புகழ் பெற்றார். மெல்ல மெல்ல அவரது புகழ் நகரெங்கும் பரவலாயிற்று. தம்மை பிரச்சனை என்று நாடி வந்தவர்களது பிரச்சனைகளைப் போக்கினார். அவர்களது நோய்களைக் குணப்படுத்தினார். மனத் தெளிவை ஏற்படுத்தினார். வருங்காலத்தில் நிகழ இருக்கும் செயல்களை முன்னரே கூறி அவர்களை எச்சரிக்கை செய்தார். அதனால் மக்களுக்கு அவர் மீது பெரிய மதிப்பும் மரியாதையும் இருந்தது. அதே சமயம் ஒரு சிலர்
அவரது தோற்றத்தையும் நடவடிக்கைகளையும் பார்த்து அஞ்சினர். அதுபோல அவரும் தனித்திருந்து வாழவே விரும்பினார். அங்கும் இங்கும் நாட்டின் பல பகுதிகளில் நாடோடியாகச் சுற்றிக் கொண்டிருப்பதே அவர் வழக்கமாக இருந்தது. பல சமய நூல்களப் படித்தார். பல ரகசிய வித்தைகளைக் கற்றுத் தேர்ந்தார். ரசவாதம், மாந்த்ரீகம், இறந்தவர்களுடன் பேசுதல், உடலை விடுத்து வெளியே சென்று வருதல் போன்ற பல ஆற்றல்கள் கை வரப் பெற்றார். அதன் மூலம் அவர் மக்களிடையே பெயரும் புகழும் அடைவதை பழமைவாதிகளான அந்நாட்டு கத்தோலிக்க சமயத்தினர் விரும்பவில்லை. அதனால் அவரை விசாரணைக்கு அழைத்தனர்

விசாரணைக்குச் சென்றால் மரணம் நிச்சயம் என்பதை முன்னரே உணர்ந்த நாஸ்ட்ரடாமஸ், அப்பகுதியை விட்டு இடம் பெயர்ந்தார். சிறிது காலம் தலைமறைவு வாழ்க்கை நடத்தியவர், பின் பிரான்ஸின் தெற்குப் பகுதிக்குக் குடியேறினார். ஒரு பெண்ணை மணம் செய்து கொண்டு வாழ்க்கை நடத்த ஆரம்பித்தார். ஆனால் அவரைப் பீடித்திருந்த ஆற்றல்கள் அவரைச் சும்மா இருக்க விடவில்லை. அவரைக் கருவியாகக் கொண்டு தங்கள் செயல்பாடுகளைத் தொடர்ந்தன.

ஒருமுறை நாஸ்ட்ரடாமஸ் சாலையில் நடந்து கொண்டிருந்தார். அப்போது கத்தோலிக்க இளம் துறவி
ஒருவர் எதிரே வருவதை கண்டார். அவரை உடனே உற்றுப் பார்த்தவர், மண்டியிட்டு வணங்கி, நெஞ்சில் சிலுவைக் குறியிட்டுக் கொண்டார்.

அந்த நபர் ஆச்சரியத்துடன் செய்கைக்குக் காரணம் வினவ, தான் வருங்கால போப்பிற்கு தன் வணக்கத்தைத் தெரிவித்ததாகச் சொன்னார் நாஸ்ட்ரடாமஸ். அதை அந்த இளம் துறவி நம்பவில்லை. அதைப் பார்த்த பார்வையாளர்களும் நம்பவில்லை. (ஆனால் பிற்காலத்தில் அது உண்மையாயிற்று. அந்த இளம் துறவி போப் ஆனார்)

மெல்ல மெல்ல வருங்காலத்தில் நடக்கும் நிகழ்ச்சிகளைச் சொல்ல ஆரம்பித்தார் நாஸ்ட்ரடாமஸ். அடுத்த ஆண்டு இன்னின்ன சமயத்தில் இன்னின்ன நடக்கும் என்று குறிப்புகளைச் சொல்லவும்,. அதுபற்றி பத்திரிகைகளில் எழுதவும் ஆரம்பித்தார். அவையெல்லாம் அவர் குறித்தபடியே மிகச் சரியாக நடக்கத் துவங்கின. அதற்குக் கிடைத்த வரவேற்பினால் மெல்ல மெல்ல பிற்காலத்தில் என்னென்ன நடக்கும் என்பதை எழுத்தில் வடிக்க ஆரம்பித்தார்.

இரண்டாம் ஹென்றி மன்னர் எப்போது, எப்படி இறப்பார் என்பதை அவர் தெரிவித்திருந்தார். ஒரு விளையாட்டின் போது மூளையில் ஈட்டி பாய்ந்து மன்னர் இறப்பார் என நாஸ்ட்ரடாமஸ் குறிப்பிட்டிருக்க, அதன்படியே நடந்தது. அதன் பின்னர் நாஸ்ட்ரடாமஸ் ஐரோப்பா முழுவதும் புகழ் பெற்றார்.

பிரபலங்கள் பலரும் அவரைத் தேடி வந்தனர். தங்கள் நாட்டுக்கு வருகை தரும்படி அழைத்தனர். அதேசமயம் அவருக்கு எதிர்ப்பும் இருந்தது. சாத்தானின் சீடராக அவரைக் கருதிய சிலர் ஆங்காங்கே கூட்டம் போட்டு அவரை எதிர்க்கவும் செய்தனர்,.

ஒருமுறை ஒரு செல்வந்தரின் வீட்டுக்கு விருந்துக்கு அழைக்கப்பட்டிருந்தார் நாஸ்ட்ரடாமஸ். அச்செல்வந்தரின் மாளிகையின் பின்புறம் இரண்டு பன்றிகள் கட்டப்பட்டு இருந்தன. ஒன்று கறுப்பு; மற்றொன்று வெள்ளை.

அந்தச் செல்வந்தர் அவற்றைக் காட்டி, “இந்த இரண்டு பன்றிகளில் எதை நாம் இன்றிரவு விருந்தில் சாப்பிடப்போகிறோம் என்று உங்களால் சரியாகக் கணித்து சொல்ல முடியுமா என்று கேட்டார்
“சந்தேகமென்ன? கறுப்புப் பன்றியை நாம் சாப்பிடுவோம். வெள்ளைப் பன்றியை ஓநாய் உண்டு விடும்,” என்றார் நாஸ்ட்ரடாமஸ்.

“இந்த மாளிகைக்குள் ஓநாயா?” என்று கிண்டலாகச் சிரித்த பிரபு அங்கிருந்து அகன்றார். பின் நாஸ்ட்ரடாமஸுக்குத் தெரியாமல் ரகசியமாக சமையற்காரரை அழைத்தவர், அந்த வெள்ளைப் பன்றியைத்தான் கொன்று சமைக்க வேண்டும் என்று சொன்னார். உடனே சமையற்காரனும் அவர் கண் முன்னாலேயே அந்த வெண்ணிறப் பன்றியைக் கொன்று சமைக்க உள்ளே எடுத்துச் சென்றான்

விருந்தும் முடிந்தது . அனைவரும் உண்டு முடித்தபின், பிரபு மீண்டும் நாஸ்ட்ரடாமஸிடம், “நாம் சற்றுமுன்பு எந்தப் பன்றியைச் சாப்பிட்டோம்?” என்று கேட்டார். உடனே நாஸ்ட்ரடாமஸ், “அதுதான் முன்பே சொன்னேனே, கறுப்புப் பன்றியைத்தான் சாப்பிட்டோம்” என்றார்.

கிண்டலாகச் சிரித்த அப்பிரபு, உடனே சமையற்காரரை அழைத்தார். “எந்தப் பன்றியைச் சமைத்தாய் என்பதை இங்கு எல்லாரிடமும் சொல்” என்றார்.

சமையற்காரர், “கறுப்புப்பன்றி” என்றார்.

பிரபுவுக்கு ஒரே அதிர்ச்சி.

“ஆனால் நான் உன்னை
வெள்ளை பன்றியை தானே சமைக்க சொன்னேன் என் கண் முன்னால்தானே அதனை நீ கொன்றாய்?” என்றார்.

“ஆம்! பிரபுவே! ஆனால் அடுப்பில் வேக வைக்க வைத்திருந்த பன்றி இறைச்சியை உங்கள் வேட்டை நாய் கௌவி இழுத்துச்சென்று விட்டது. அதனால் வேறு வழியின்றி கறுப்புப் பன்றியைக் கொன்று சமைத்துப் பரிமாறினேன்” என்றார்.

அந்தப் பிரபுவின் வேட்டைநாய் உண்மையிலேயே ஒரு ஓநாய்க்குப் பிறந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இவ்வாறு வாழ்வாங்கு வாழ்ந்த நாஸ்ட்ரடாமஸ் முதலில் பிரான்ஸ் நாடு பற்றி மட்டுமே எழுதிக் கொண்டிருந்தார். பின்னர் உலகமெங்கும் என்ன நடக்கும் என்பதை எழுத ஆரம்பித்தார். மிகவும் முயன்று கி.பி.1553 முதல் கி.பி. 3797 வரை என்னென்ன நடைபெறும் என்பதை பாடல் வடிவில் எழுதி வைத்தார். கி.பி.1566-ஆம் ஆண்டில் நாஸ்ட்ரடாமஸ் காலமானார். அவர் இறந்த பின்பு அவர் உடலைப் புதைத்தனர்.

நாஸ்ட்ரடாமஸான் இறப்புக்குப் பின்னர் அவருடைய மண்டையோட்டில் மதுவை ஊற்றி யார் அருந்துகிறார்களோ அவர்களுக்கு நாஸ்ட்ரடாமஸின் சக்திகள் அனைத்தும் வந்துவிடும்; ஆனால் அவ்வாறு செய்பவர்கள் உடனேயே இறந்துவிடுவார்கள் என்று அக்காலத்தில் ஒரு நம்பிக்கை இருந்தது.நாஸ்ட்ரடாமஸ் இறந்து 225
வருடங்கள் கழித்து, அந்த நம்பிக்கை உண்மையா என்று பார்க்க விரும்பினர் சிலர். 1791ஆம் ஆண்டு மே மாதம் நள்ளிரவு வேளை. மிதமிஞ்சிக் குடித்திருந்த மூன்று பிரெஞ்சுப் போர் வீரர்கள், நாஸ்ட்ரடாமஸின் புதைகுழியைத் தேடிக் கண்டுபிடித்தனர். அதைத் தோண்டி அவருடைய சவப்பெட்டியை வெளியே எடுத்தனர். சவப்பெட்டிக்குள் நாஸ்ட்ரடாமஸின் எலும்புக்கூடு இருந்தது. அதன் கழுத்தில் ’மே, 1791’ என்று பொறிக்கப்பட்டிருந்த பித்தளைப் பட்டயம் ஒன்று இருந்தது. ஒருவன் நாஸ்ட்ரடாமஸின் மண்டையோட்டை எடுத்து அதில் மதுவை ஊற்றிக் குடித்தான். அப்போது எங்கிருந்தோ வந்த துப்பாக்கிக் குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்து அவன் நாஸ்ட்ரடாமஸின் புதைகுழிக்குள்ளேயே விழுந்து இறந்தான்.

பிரெஞ்சுப்புரட்சியின் தொடர்பாகக் கலவரம் நடந்துகொண்டிருந்த சமயம் அது. கலவரத்தில் யாரோ யாரையோ நோக்கிச் சுட, அந்தக் குண்டு அவனுடைய கழுத்தில் பாய்ந்து அவன் இறக்க நேர்ந்தது. அது கண்டு பயந்து போன மற்ற இருவரும் அங்கிருந்து ஓட்டம் பிடிக்க, அவர்கள் கலவரக்காரர்கள் என்று கருதப்பட்டு அடையாளம் தெரியாத சிலரால் சுடப்பட்டு இறந்து போனார்கள்.

“என் புதைகுழியை யார் திறக்கிறார்களோ, அவர்கள் உடனடியாக அதை மூடவேண்டும்
இல்லாவிட்டால் அவர்களுக்கு பெரும் ஆபத்து விளையும்” என்று தன்னுடைய தீர்க்கதரிசனங்களில் நாஸ்ட்ரடாமஸ் கூறியிருந்தார். அதுமட்டுமல்ல; மே 1791ல் அந்தச் சம்பவம் நடக்கும் என்பதை 225 ஆண்டுகளுக்கு முன்னமேயே அவரால் கணித்துக் கூற முடிந்திருக்கிறது. அதைக் குறிக்கத்தான் தன்னுடைய கழுத்தில் அந்தப் பட்டயத்தைக் கட்டிக்கொண்டு அவர் இறந்திருக்கிறார் என்ற உண்மையையும் மக்கள் பின்னர் அறிந்து கொண்டனர்.

மகத்தான் ஆற்றல் கொண்ட தீர்க்கதரிசி தான் நாஸ்ட்ரடாமஸ், இல்லையா?

                          ***



No comments:

Post a Comment